சென்னை தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகர், மூசா தெருவிலுள்ள உத்தம் என்னும் நகைக்கடையில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையர்கள் கடையின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து 4.125 கிலோ தங்க நகைகள், 15 தங்கக்கட்டிகள் மற்றும் 15 வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வழக்கம்போல இன்று காலை கடையை திறப்பதற்காக வந்த நகைக்கடை உரிமையாளர்கள், உடைக்கப்பட்டிருந்தக் கேட்டின் பூட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கொள்ளை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திர பாபு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுகொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சென்னையின் முக்கிய பகுதியில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.