புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிப்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், இந்த சிகிச்சை முறையே பலரது உயிருக்கு ஆபத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
தனிமைப்படுத்துவதால் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள், சிகிச்சை பெறும் கொரோனா மருத்துவமனையிலேயே தற்கொலை செய்வது என்பது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரங்கேறி வருகிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த 51 வயதான நபர் வேல் முருகன் . கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், மருத்துவமனையில் உள்ள படிக்கட்டின் கிரில்லில் தூக்குப்போட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்டு, உடனடியாக செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சித்த நபரை மீட்டு, உடனடியாக வெண்டிலேட்டர் சிகிச்சையளித்து வருகின்றனர்.
மனச்சோர்வு காரணமாகத் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.




