தமிழக சட்டசபைக்குள் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா எடுத்துச்சென்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல். ஏ கள் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக குற்றம் சாட்டி, அதனை நிரூபிக்கும் வகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்குள் குட்காவினை எடுத்துச்சென்றதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ கள் 21 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி எதிர்க்கட்சி எம்.எல்ஏகள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தான் தமிழக சட்டப்பேரவை செயலர் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை பல கட்டமாக நடைபெற்ற நிலையில், இறுதி விசாரணை தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. இது தரப்புகளிலிருந்து அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பளிக்கஉள்ளது.




