கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீதும், அந்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.