மத்திய அரசின் தொல்லியல் துறை கல்லூரியில் தமிழ் புறக்கணிக்பட்டது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்திய தொல்லியல் துறை சார்பில் இயங்கிவரும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்புக்கு விண்ணபிக்க, வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ் மொழி இடம் பெறாததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
செம்மொழியான தமிழ் மொழியைப் புறக்கணித்திருப்பது தமிழர்களுக்கான வாய்ப்புகளை பறிப்பது மட்டுமன்றி, தமிழர்களின் பண்டைய கலாச்சார, நாகரிக, வரலாற்று அடையாளங்களை மறைக்கும் செயல் என்பதால், முதுகலைப் பட்டயப்படிப்பு கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனார்.
இதற்கிடையே, தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிப்பு தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் எழுதி இருந்தார். பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் காரணமாக தொல்லியல் படிப்புக்கான கல்விதகுதியில் மீண்டும் தமிழ்மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனிடையே, தமிழ் மொழி புறக்கணிப்பை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதனை விசரனை செய்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதில்,
- பழமையான மொழிகளில் முதல் மொழியும், செம்மொழியான தமிழ்மொழி ஏன் முதலில் சேர்க்கப்படவில்லை.
- தொடர்ச்சியாக எதிர்ப்புகள் எழுந்தவுடன் தான் தமிழ்மொழி சேர்க்கப்படுமா?,
- செம்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து தொல்லியல் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி யார்?
- ஒருவேளை எதிர்ப்புகள் எழாமல் இருந்தால் தமிழ்மொழி சேர்க்கப்பட்டு இருக்குமா?
- இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பழமையான மொழிகள் எவை?
- மாநிலங்கள் சமயம் மற்றும் சாதி அடிப்படையில் இல்லாமல் மொழி வழியாகவே ஒன்றுபட்டு உள்ளன. ஆனால் இதற்கு மாறாக பொறுப்பற்ற முறையில் நடந்து, அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
- எந்த அடிப்படையில் பாளி, பாரசீகம் உள்ளிட்ட மொழிகள் இந்த அறிவிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது?, போன்ற அதிரடியான கேள்விகளுக்கு தொல்லியல் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் மாதம் 28ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உள்ளனர்.