அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தின் பிரச்சினைகளில் குளிர்காய நினைத்தவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்

சென்னை:
.முதல்வர் வேட்பாளர்:
அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் குறித்து சர்ச்சை எழுந்து வந்த நிலையில், இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதையடுத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இன்று பொன்னான நாள். அ.தி.மு.க. தொண்டர்களும் தமிழக மக்களும் எதிர்பார்த்த அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மகிழ்ச்சியான ஒருமித்த கருத்து எட்டப்பட்டு நல்ல முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மண் விழுந்துள்ளது
ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். பிரச்சினைகள் வராதா? அதில் குளிர்காயலாம் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போடுகின்ற வகையில் ஏகோபித்த உணர்வுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். எதிரிகள், துரோகிகள் புறமுதுகை காட்டி ஓடும் வகையில் புதிய புறநானூற்றை அ.தி.மு.க. படைக்கும். 2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.




