அமைச்சரின் மரணம் குறித்து பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 31-ம் தேதி அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மரணம் குறித்து சர்ச்சையான கருத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 11.15 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அம்மாவின் ஆட்சியில் எந்த ஒரு குறையும் கண்டு பிடிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர், சட்ட மன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அமைச்சர் இறப்பு குறித்து பொய்யான அறிக்கைகள் வெளியிட்டு, மலிவான அரசியலை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்.
மறைந்த வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 12-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்கவும், அன்னார் நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் ஆகியவற்றுக்காக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில் அன்னாரது விருப்பத்தின் பேரில் தொடர் சிகிச்சைக்காக கடந்த மாதம் 13-ம் தேதி அதிகாலை அனுமதிக்கப்பட்டார்.அப்போது முதல் அவருக்கு உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
நானும், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரும், காவேரி மருத்துவமனையின் மருத்துவக் குழுவினருடன் இணைந்து பணியாற்றிட அமைக்கப்பட்ட, சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் ஒரு சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவும், அமைச்சரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவினரும், தனியார் மருத் துவமனையை தொடர்பு கொண்டு சிகிச்சை விவரங்கள் அறிந்து உரிய ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வந்தனர்.
உயிர் காக்கும் உயரிய மருந்துகள் அளிக்கப்பட்டதனால், அவரது உடல்நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், அவருக்கு தொடர்ந்து அதிக அளவில் பிராணவாயு கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு கடந்த மாதம் 24-ம் தேதி முதல் பாதிப்பு அதிகமானது. இதனால் அவரது பல முக்கிய உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின.
பின்னர் அவருக்கு எக்மோ என்ற உயிர்காக்கும் கருவி மூலம் அவரது நுரையீரல் இயக்கப்பட்டது.
அக்டோபர் 25-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தினால், எக்மோ அவருடைய இருதய துடிப்பு சீர் செய்யப்பட்டு தொடர்ந்து அவருடைய இருதயம் இயக்கப்பட்டது. இதனால், அக்டோபர் 26, 27-ம்தேதிகளில் அமைச்சரது கண் இமைகள் மற்றும் கை கால்களில் அசைவும் இருந்ததை மருத்துவக்குழுவினர் கண்டறிந்தனர்.
இவ்வாறு அமைச்சருக்கு பல்வேறு உயர்தர தொடர் சிகிச்சைகள் மருத்துவ வல்லுனர் குழுவினரால் பல்வேறு நிலைகளில் அளிக்கப்பட்டு வந்த போதிலும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, அனைத்து முயற்சிகளும் பலன் அளிக்காமல் 31-ம் தேதி இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார்.
மேலும், காவேரி மருத்துவமனை நிர்வாகம், அமைச்சரின் சிகிச்சை காலத்தில் அதாவது சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து, இறப்பு வரை அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனை அறிக்கையை, அவ்வப்போது வெளியிட்டு வந்தது.
காவேரி மருத்துவமனையும், மறைந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகள் குறித்து அதன் இறப்பு அறிக்கையில் விவரமாக கொடுத்துள்ளது.
மேலும், மறைந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான விவரங்களை காவேரி மருத்துவமனையின் பதிவேடுகள் மற்றும் பிற ஆவணங்களை மாநில மேல் முறையீட்டு அலுவலர் (தமிழ்நாடு மருத்துவமனைகள் முறைபடுத்தும் சட்டம்) மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஆய்வு செய்து அவர்களுடைய அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
மறைந்த அமைச்சரின் உடல் நிலை பற்றியோ, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பற்றியோ, அரசோ, மருத்துவமனையோ எதையும் மறைக்கவில்லை.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தந்த பொய்யான அறிக்கையின் மீது என்னுடைய விளக்கத்தினையும், அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகளையும் நான் எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளேன். “அம்மாவின் அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியம்” என்ற முதல்வரின் உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தான் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றோம்.
திமுக கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் சிகிச்சையில் இருந்தபோது, உயரிய மருந்துகள் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உடனடியாக அவருக்கு அரசு தேவையான மருந்துகளை அளித்தது.
கடவுளுக்கு நிகராக பணி செய்கின்ற நமது மருத்துவர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சித் தலைவருடைய அறிக்கை அமைந்துள்ளது.
வேளாண்மைத்துறை அமைச்சர் சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையில்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சிகிச்சை பெற்றார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அரசியல் செய்ய எத்தனையோ காரணங்கள் இருந்த போதிலும், அமைச்சரின் இறப்பிலும் அரசியல் லாபம் தேடும் எதிர்க்கட்சித் தலைவரை தமிழ்நாடு பெற்றுள்ளது நமக்கெல்லாம் துரதிருஷ்டம். அவருடைய இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
மறைந்த அமைச்சரின் இறப்பின்மீது பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட எதிர்க்கட்சித்தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.