நாகையில் காணாமல் போன விளையாட்டு மைதானத்தைக் கண்டுபிடித்து தரக்கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், திட்டச்சேரி ஜ்அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் தலைமையில், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், ஆலத்தூர் ஊராட்சியில் கடந்த 2019-2020-ம் நிதியாண்டில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின்கீழ் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்குத் தேவையான கட்டமைப்புப் பணிகள் அனைத்தும் நடந்திருப்பதாகவும் அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மைதானம் அமைக்கப்பட்டு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 30 நபர்கள் பணிகள் செய்ததாகவும், அவர்களுக்கு ரூ.6,870 ஊதியமாக வழங்கப்பட்டிருப்பதாகவும், அதேபோல தூய்மைப் பணியைச் செய்த 10 நபர்களுக்கு ரூ.2,290 ஊதியமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குறிப்பிட்ட அந்த இடத்தில் அப்படியோர் மைதானமே இதுவரை இல்லை. அதேசமயம், அந்தப் பகுதியில் மைதானம் கட்டியிருப்பதாக அதற்குரிய தொகை பெறப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மைதானம் கட்டியதாகப் பணம் கையாடல் செய்த நபர்கள் யாரென்று தெரியவில்லை. அந்த இடத்தில் மைதானமே இல்லை என்பதற்குரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது. எனவே, மைதானம் கட்டியதாக போலி ஆவணங்களைக் காட்டி, அரசுப் பணத்தைக் கையாடல் செய்தவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒருவேளை மைதானம் கட்டியிருந்தால் காணாமல்போன மைதானத்தைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.