“நிவர்” தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும், எனவே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நேற்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி, நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மூன்று நாடகளுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நாளை மறுநாள் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 590 கி.மீட்டரும் புதுச்சேரியில் இருந்து சுமார் 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாகவும், வடமேற்கு திசையில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னத்தால் வங்கக்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், நாகை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயல் தமிழகத்தை நெருங்கிக்கொண்டு வருவதால், தனுஷ்கோடி தொடங்கி மரக்காணம் வரை கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
நாளை மறுநாள் (25-11-2020) புயல் கரையை கடக்கும்போது, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், ஈரோடு, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின் துறை தயாராக உள்ளது என்றும், எனவே வருகின்ற 25-ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது மக்களின் பாதுகாப்புக்காக, முன்னெச்சரிக்கை நடிவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.