வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மீது கார் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துவுள்ள அனந்தபுரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி (65). தன்னுடைய மகன் திருமலையின் வீட்டு வாசலில் வழக்கம் போல படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று மூதாட்டி மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி லட்சுமி தலை நசுங்கி உயிரிழந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு எழுந்த பொதுமக்கள், கார் ஒட்டுநரை பிடிக்க முயன்றனர். அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி மீது காரை ஏற்றி, அவர் இறப்பதற்கு காரணமானவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (26) என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
மூதாட்டி வசிக்கும் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் முத்துப்பாண்டி தமிழ்நாடு காவல் துறையில் 10’th பட்டாலியன் காவல் படையில் சிறப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.