கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதால் தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் திருவள்ளுவருக்கு காவி வர்ணம் பூச முயற்சி மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திமுகவின் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார். தமிழ்ப் பற்றும், உணர்வும்மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது எனவும் மக்களின் வரும் தேர்தலில் ஆளும் கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என அவர் கூறியுள்ளார். திமுக எம்எல்ஏவும், பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அதிமுக அரசு, தங்கள் கட்சியை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தையுமே மத்தியில் ஆளும் பாஜகவிடம் அடகு வைக்கத் துணிந்து விட்டதைத் மக்கள் நன்றாக அறிவார்கள்.
தமிழரின் தொல்பெருமையைப் பறைசாற்றும் கீழடி நாகரீகத்தைத் தமிழர் நாகரீகம் அல்ல; அது பாரதப் பண்பாடு என வாய் கூசாமல் சொன்னவர்தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவே இருக்கின்றார் என்பது அதிமுக ஆட்சியின் வெட்கக்கேடான வரலாறு. பாஜக அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கும், கல்வியில் சமஸ்கிருதமயமாக்கலுக்கும் வழிவகுக்கும் போது, மொழி உணர்வு கிஞ்சிற்றும் இன்றி அதனைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் துணிந்தவர்கள்தான் அதிமுக அரசின் அமைச்சர்கள். அவர்கள் பதவி சுகத்தின் கடைசிச் சொட்டையும் விடாமல் உறிஞ்சிக் கொள்ள வேண்டுமென்று காத்திருக்கின்றார்கள்.
Read more – ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் : நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் திமுக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பாடப்புத்தகங்களின் மேலட்டையில் இடம் பெற்றிருந்த வள்ளுவரின் படத்தின் மீது ‘ ஸ்டிக்கர்’ ஒட்டி மறைத்த ஆட்சியின் நீட்சிதானே எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி வள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசும் கயமைத் தனத்திற்குக் கல்வித் தொலைக்காட்சியைத் தாரை வார்த்துத்தர துணிந்திருக்கின்றது. என்று கூறியுள்ளார்.