ஜெயலலிதா மரணம் தொடர்பான இன்னும் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றத்தில் ஆறுமுக சாமி ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி அப்பல்லோ நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வேறு வழக்குகளை விசாரிக்கவிருப்பதால் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தனர். அப்போது குறிக்கிட்ட இந்த வழக்கு நீண்ட நாட்களாக விசாரிக்க படாமல் நிலுவையில் இருப்பதாகவும் ஒவ்வொரு முறையும் விசாரிக்காமலேயே ஒத்திவைக்கப்படுவதாக கூறினார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார் இன்னும் தங்கள் சார்பில் சாட்சியமாக நான்கு பேரை மட்டுமே விசாரிக்க இருப்பதாகவும் நீண்ட நாட்களாக இந்த விவகாரம் நிலுவையில் இருப்பதால் தங்களால் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத சூழலில் இருப்பதாகவும் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் அடுத்த வாரம் வியாழக்கிழமை வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அன்றைய தினம் நிச்சயமாக வழக்கின் விசாரணை நடைபெறும் எனவும் கூறினர். இந்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய தமிழக அரசின் இடைக்கால மனுவும் அப்பல்லோ நிர்வாகத்தின் மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.




