தமிழக அரசின் பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே வழங்கப்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை:
பா.ம.க. செயற்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழக அரசு பணிகள்
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பணிகளும் முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை வரும் 14ம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு நீதியரசர் தணிகாச்சலம் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பரிந்துரை அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கையை பெற்று, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை விரைந்து செயல்படுத்த வேண்டும். மத்திய அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப்பணிகளில் ஒவ்வொரு நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நீட் உள் ஒதுக்கீடு
நீட் தேர்வால் கிராமப்புற, ஏழை மாணவர்கள் தான் மருத்துவக் கல்வி கற்கும் வாய்ப்புகளை இழந்துள்ளனர். நீட் தேர்வை நாடு முழுவதுமோ அல்லது தமிழ்நாட்டில் மட்டுமோ நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழக ஆளுனர் முன்வர வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டவாறு, மத்திய அரசு உடனடியாக குழுவை அமைத்து இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவில் மட்டும் தான் நெல் கொள்முதல் செய்ய முடியும் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்காமல்,விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.