தந்தையின் அரசுப் பணிக்கு தனக்கு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், அவருக்கு நஞ்சு கொடுத்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையிலுள்ள கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக இருந்தவர் கருப்பையா (60). வரும் 31-ம் தேதியுடன் இவர் பணியில் இருந்து ஓயவு பெறுகிறார். ஆனால் கடந்த 18-ம் தேதி பேரூராட்சி அலுவலகம் அருகில் கருப்பையா சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவருடைய உடலை கைப்பற்றி உடற்கூராய்வு செய்து பார்த்த போது, அவர் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதற்காக கருப்பையாவின் மகன் பழனி (32) மற்றும் அவருடைய நண்பன் ஆனந்தன் (48) ஆகியோரிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இன்னும் சில நாட்களில் தந்தை கருப்பையா பணியில் இருந்து ஓயவு பெற இருந்துள்ளார். அவருடைய அரசு வேலை தனக்கு கிடைக்க வேண்டும் என்கிற ஆசையில் மகன் பழனி தந்தை கருப்பையாவை விஷம் கொடுத்து கொன்றது தெரியவந்தது. இதற்கு அவருடைய நண்பன் ஆனந்தனும் உதவியாக இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது.