புதுக்கோட்டை மாவட்டத்தில் புளிய மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த கட்டை பையிலிருந்து, பிறந்து மூன்று நாட்களே ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பல பெண்கள் பல்வேறு துறைகளிலும் அபரிவிதமான வளர்ச்சி பெற்று, சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். அப்படி, இருக்க இன்னமும் கூட பெண் பிள்ளளைகள் பிறந்தால் கள்ளிப் பால் கொடுத்து கொல்வது, குப்பை தொட்டியில் வீசி செல்வது போன்ற செயல்கள் தமிழகத்தில் நிகழ்வது வேதனைக்குரிய செயலாக உள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமயம் அடுத்த இளங்குடிபட்டியில் அமைந்துள்ள அய்யனார் கோயில் முன்பு உள்ள புளிய மரத்தில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
இதை அந்த வழியாக சென்றவர்கள் சிலர் கேட்டு மரத்திற்கு அருகில் சென்று பார்த்தபோது, பிறந்த மூன்று நாட்களே ஆன பெண் குழந்தை கட்டை பையில் வைத்து மரத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக, தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் குழந்தையின் உடல்நலம் குறித்தும், சிகிச்சை அளிப்பது குறித்து தொடர்பாக சைல்டு லைன் அமைப்பினர் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர் .
இதனிடையே, குழந்தையை பையில் வைத்து மரத்தில் தொங்கவிட்டு சென்றது யார் என்பது தொடர்பாக, நமணசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .