நீதிமன்றத்திலேயே போலி முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தி, ரூ.27.66 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய சம்பவங்களில் போலி முத்திரை தாள் மோசடியும் ஒன்று. அரசின் தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு அந்த மோசடி ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறபடுகிறது. ஆனாலும் கூட அவ்வப்போது முத்திரை தாள் மோசடி தொடர்பான புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.
அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றத்திலேயே இந்த மோசடி சம்பவம் நடந்து இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2014 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் 75 வழக்குகளில் நீதிமன்ற கட்டணத்திற்கான முத்திரைத்தாளுக்கு பதிலாக கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி முத்திரைத்தாள் பயன்படுத்தி 27 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
மோசடி தொடர்பாக, மாவட்ட முதன்மை நீதிமன்ற தலைமை நிர்வாக அதிகாரி பால்ராஜ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.