தமிழக கிராமத்து சமையல் கலைஞர்களுடன் ராகுல்காந்தியும் சேர்ந்து சமைத்து கலந்துரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்தார். தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுலுக்கு கரூர் மாவட்டம் அருகே உள்ள அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தோட்டத்தில் சமையல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சமையலை வில்லேஜ் குக்கிங் என்னும் யூ டியூப் சேனல் கலைஞர்கள் மேற்கொண்டனர். அவர்களுடன் தமிழில் சிறிது கலந்துரையாடிய ராகுல் சமையலிலும் ஈடுபட்டார்.
அந்த சமையல் கலைஞர்கள் சுவை மிகுந்த காளான் பிரியாணியை ராகுல்காந்திக்கு சமைத்து கொடுத்தனர். ரைத்தா செய்தபோது தயிரையும் உப்பையும் போட்டு கலக்கிய ராகுல் ருசி பார்த்தவிட்டு, நானும் சமைப்பேன் என்று கூறினார். மேலும் பிரியாணி நன்கு மணமாக உள்ளது என்றும் பார்ப்பதற்கும் நன்றாக உள்ளதும் என்றும் பாராட்டினார்.தலைவாழை இலையில் ராகுல்காந்திக்கு உணவு பரிமாறப்பட்டது.
அப்போது ஓலைப்பாயில் சமையல் கலைஞர்களுடன் அமர்ந்து உண்ட ராகுல் ரொம்ப நல்லாருக்கு என்று உணவை ருசித்து சாப்பிட்டார். தனக்கு பிடித்த உணவுகளில் காளான் பிரியாணியும் ஒன்று என்று கூறினார். அடுத்த முறை வரும் பொழுது தனக்கு ஈசல் சமைத்து தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ராகுல்காந்தி. அழகுத் தமிழில் ராகுல்காந்தி பேசியதும் அவரது எளிமையும் காண்போரை கவர்ந்து வருகிறது.