இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதிக்கு தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதிக்கு தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மஞ்சள்:
இந்திய மஞ்சளுக்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற மஞ்சள் சந்தையாக ஈரோடு திகழ்வதால், தமிழகத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மஞ்சள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்து குவிண்டால் ரூ.6,000-க்கும் குறைவாகவே ஏலத்தில் எடுக்கப்படுகிறது. அதனால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தடை:
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்றுமதி குறைந்திருப்பது மஞ்சள் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றாலும் கூட, இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தான் விற்பனை குறைவுக்கும் விலை வீழ்ச்சிக்கும் முதன்மைக் காரணம். ஈரோடு பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சளின் பெரும்பகுதி இலங்கைக்குதான் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
இலங்கை அரசின் மஞ்சள் இறக்குமதி தடையால் இலங்கை மக்களும், தமிழக உழவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டுத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீக்க வேண்டும்:
இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி, ஈரோடு மஞ்சள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.