
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண வந்த இரண்டு அடியவர்களில் இருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று நடைபெற்றது. இதை காண்பதற்காக வைகை ஆற்றிலும் ஆற்றங்கரையோரத்திலும் லட்சக்கணக்கான அடியவர்கள் கூடி இருந்தனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், மற்ற மாவட்டங்கள் வெளிமாநிலங்களில் இருந்து கூட மக்கள் கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண வந்திருந்தனர். கடந்த இரண்டாண்டுகளுக்கு பிறகு இந்த வைபவம் நடப்பதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று அதிகாலை 6.30 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் அடியவர்களுக்கு எழுந்தருளினார். அதை பார்த்த திரளான மக்கள் பக்திபரவசத்துடன் கோவிந்தா கோவிந்தா என்று முழங்கினர். அப்போது பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கி ஒரு மூதாட்டி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்று தெரியவந்துள்ளது. மற்றொருவர் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியாக இருந்தார். ஆனால் அவர் யாரென்று அடையாளம் தெரியவில்லை.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை மூதாட்டி குறித்து விசாரணை நடந்து வருகிறார். அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மேலும் 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை பற்றி தகவல் அளிக்க, 9498042434 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, காயமடைந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவ நிகழ்ச்சியின் போது கூட்டநெரிசலில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த 10 பேருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதல்வர் ஆணையிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மூர்த்தி, சிகிச்சை பெற்று வருபவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தார்.




