பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆன்லைனில் 200 வகையான விதவிதமான செடிகளை விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.
தற்போது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மாடித் தோட்டம் என்பது பரவலாக பிரபலம் அடைந்து வருகிறது. காய்கறிச் செடிகள் முதற்கொண்டு பூச்செடிகள் வரை மாடித் தோட்டத்தில் பயிரிட்டு பலரும் வளர்த்து வருகின்றனர். அப்படிப்பட்ட மாடித் தோட்டத்துக்குத் தேவையான செடிகளை நர்சரி தோட்டம் வைத்திருப்பவர்களிடம் சென்று வாங்கி வருவர். தற்போது எல்லாமே ஆன்லைன் மயமான நிலையில், விதவிதமான நர்சரிச் செடிகளையும் ஆன்லைனில் விற்று வருகிறார் கடலூர் மாவட்டம் வேகாக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த முதுநிலை பொறியியல் பட்டதாரியான சக்திவேல். எம்.இ. முடித்து தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த சக்திவேலுவுக்கு அந்தப் பணியை விட, செடிகள் வளர்ப்பிலேயே ஆர்வம் அதிகம் இருந்திருக்கிறது.
செடிகள் விற்பனையை தற்காலச் சூழலுக்கு ஏற்ப ஆன்லைன் வழியே செயல்படுத்த எண்ணியவர், என்ற பெயரில் இணையதளத்தை உருவாக்கி, சுமார் 250 வகையான செடிகளை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார். நாடு முழுவதும் எங்கிருந்து செடிகள் ஆர்டர் செய்தாலும் 3ல் இருந்து 4 நாட்களுக்குள் அவர்கள் கையில் கிடைக்கும் வகையில் பார்சல் அனுப்பி வைத்துவிடுவதாகக் கூறுகிறார் சக்திவேல். ஆண்டுக்கு ஒரு கோடி கன்றுகளுக்கு மேல் உற்பத்தி செய்வதாகவும் அவர் கூறுகிறார். 10 ரூபாயில் இருந்தே சக்திவேலிடம் பழச்செடிகள், பூச்செடிகள், மூலிகைச் செடிகள், மரச்செடிகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொடர்ந்து ஆர்டர்கள் குவிவதால் நல்ல வருமானம் கிடைப்பதாக பெருமிதத்துடன் கூறுகிறார் சக்திவேல்.