சென்னை – கோவை இடையே அக்டோபர் 1ந் தேதி முதல் படுக்கை வசதிப் பேருந்துகள்
இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து, ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, தற்போது படிப்படியாக பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக பல்வேறு ,வழிகாட்டு நெறிமுறைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,
சென்னை மற்றும் கோவை இடையே வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் படுக்கை வசதி கொண்ட விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
சென்னை – கோவை
பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவை-சென்னை இடையே பகல், இரவு நேரங்களில் குளிர்சாதனமில்லா இருக்கை, படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பயண நேரம்
இந்த பேருந்துகள் அவிநாசி, பவானி, சேலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் வழியாக இயக்கப்பட உள்ளன. கோவையில் இருந்து தினந்தோறும் காலை 7 மணி, இரவு 10 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு இந்தப் பேருந்துகள் புறப்படும். இதே நேரத்தில் சென்னையில் இருந்தும் கோவைக்குப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணங்களே வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
மேலும், இந்தப் பேருந்துகளுக்கான முன்பதிவை tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், TNSTC official mobile app என்ற செல்போன் செயலி மூலமாகவும் பயணிகள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.