சென்னையில் இனி விடுமுறை நாட்களில் 401 ரயில் சேவை அமல் படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை:
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு கொண்டு வந்த பல தளர்வுகளின் அடிப்படையில் ஆரம்பத்தில் களப்பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய அனுமதி வழங்கியது.
மேலும், கடந்த டிசம்பர் 23 ம் தேதி முதல் பொதுமக்கள் அனைவரும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது.இந்தநிலையில், தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் சென்னையில் 401 மின்சார ரயில் சேவை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Read more – சசிகலாவின் விடுதலைக்கு தடையா ? டெல்லிக்கு விரைந்த டிடிவி தினகரன்
அதன்படி, சென்ட்ரல்-அரக்கோணம் வழியாக 147 மின்சார ரயில் சேவைகளும், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி வழியாக 66 சேவைகளும், கடற்கரை-வேளச்சேரி இடையேயான 52 சேவைளும், கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் 136 சேவைகள் என மொத்தம் 401 சேவைகள் இனி வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களிலும் பின்பற்றப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இந்த நடைமுறையானது நாளை (10-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வருகிறது.