சென்னையில் இன்று முதல் புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு கொண்டு வந்த பல தளர்வுகளின் அடிப்படையில் ஆரம்பத்தில் களப்பணியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய அனுமதி வழங்கியது.
இந்தநிலையில், இன்று (புதன்கிழமை) முதல் பொதுமக்கள் அனைவரும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்த அதிகாலையிலிருந்து காலை 7 மணி வரையும்,அதன்பிறகு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.மேலும், இரவு 7 மணியில் இருந்து சேவை முடிவடையும் நேரம் வரையிலும் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Read more – ஒரு நூலுக்கு பணம் செலுத்துங்கள். இரண்டாம் நூலை அன்பளிப்பாக பெறுங்கள்.
பொதுமக்கள் புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுதல் வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.