தடையை மீறி தமிழகத்தில்நடத்தப்பட்டு வரும் வேல்யாத்திரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரமாட்டார் என்று மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
தமிழகத்தில் பாஜக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் தடைகளை மீறி வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் யாத்திரை தொடங்கும் முன்னரே போலீஸார் பாஜகவினரை கைது செய்து வருகிறது.
இந்நிலையில் வேல் யாத்திரை குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறும்போது, “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 21-ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளது. அமித் ஷாவின் வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும்.
21ம் தேதி வேல் யாத்திரை கோவையில் இருக்கும் என்பதால் யாத்திரையில் அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார்” என்றார்.
முன்னதாக வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர் என்று முருகன் கூறி வந்தார். ஆனால் யாத்திரைக்கு தமிழக அரசு விதித்துள்ளதால் மத்திய அமைச்சர்கள் இந்தயாத்திரையில் பங்கேற்பதில் தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது.