ஒட்டன்சத்திரத்தில், ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் வாங்கித்தராததால், 12-ஆம் வகுப்பு மாணவி ரித்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி, சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கூலி வேலை செய்து தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். இவரது மகள் ரித்திகா, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா தொற்றுப் பரவி வருகிற காரணத்தால், ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே ஆன்லைன் வகுப்பிற்காக புதிய செல்போன் வாங்கித்தருமாறு, மாணவி ரித்திகா தன்னுடைய பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
குடும்பத்தின் வறுமைக் காரணமாக பெற்றோர் செல்போன் வாங்கித் தர மறுத்துள்ளனர். ஆனால் செல்போன் இருந்தால்தான் படிக்க முடியும் என்றும், அதனால் செல்போன் வாங்கித் தருமாறும், ரித்திகா அவருடைய தாயாரிடம் கேட்டுள்ளார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக, அவரின் பெற்றோரால் செல்போன் வாங்கி கொடுக்க முடியவில்லை.
இதனால் மனமுடைந்துக் காணப்பட்ட ரித்திகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரித்திகாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரத்து வருகின்றனர்.
ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கித்தராத காரணத்தால் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே நடந்து வருவதால், கல்வியாளர்களும், பெற்றோரும் கவலையடைந்து வருகின்றனர். இதுப்போன்ற சம்பவங்கள் இனிமேலாவது நடக்காமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.