மாஞ்சோலையில் தொடர்ந்து பெய்துவரும் மழைக்கு மத்தியில், ஆன்லைன் வகுப்பிற்காக சிக்னல் கிடைக்கும் இடத்தில் குடையினை பிடித்துக்கொண்டு படிக்கும் மாணவர்களின் நிலை வேதனைக்குரியது.
கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதால் மாணவர்கள் படும் சிரமம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. எப்போது பள்ளிக்கு விடுமுறை கிடைக்குமோ? என்ற ஏக்கத்தில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் தற்போது பள்ளிகள் எப்போது திறப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
இதே மனநிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள மாஞ்சோலை தோயிலை தோட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆம் கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்துவருகிறது. ஏற்கனவே மலைப்பகுதிகளில் தொடர்ந்து மொபைல் சிக்னல் கிடைப்பதே அரிதான ஒன்று. அதற்கிடையில் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டும் என்றால் சொல்லவா வேண்டும். கொட்டும் மழையிலும் குடையினை பிடித்துக்கொண்டு எங்கு சிக்னல் கிடைக்கிறதோ? அங்கு அமர்ந்து வகுப்புகளை மாணவர்கள் கவனிக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
ஆன்லைன் வகுப்பிற்கான தீர்வு?
சிறு குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது என்பது தேவையற்ற ஒன்றாகும். அவர்களுக்கு தாங்களே முதல் எழுத்துக்களான தமிழ் மற்றும் ஆங்கிலத்தின் உயிர் எழுத்துக்கள், எண்கள் போன்றவற்றை தினமும் வீட்டில் அமர்ந்து பெற்றோர்கள் படிக்க வைத்தாலே போதுமான ஒன்றாக இருக்கும் என்பது கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
குறிப்பாக பொதுத்தேர்வினை எதிர்க்கொள்ளும் 10 மற்றும் 12 மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் அவசியமான ஒன்றாக. இந்த நிலையில் ஊரடங்கினால் யாரும் பள்ளிக்கு செல்ல முடியாது ஆனால் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களில் பள்ளிகளில் பணியாற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்வார்கள் எனவே அவர்களை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுடன் சமூக இடைவெளியுடன் வகுப்புகளை நடத்துவது ஒரு தீர்வாக அமையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.