மசினகுடியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட T23 புலியின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு வன உயிரின முதன்மை கூடுதல் வன பாதுகாவலர் சேகர் குமார் நீரச் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி, தேவன் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் நால்வரை அடித்துக்கொன்ற டி23 புலியை வனத்துறையினர் 21 நாள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்தனர். புலியின் உடலில் காயங்கள் இருந்ததால் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள வனவிலங்கு மீட்பு மற்றும் புத்துணர்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அங்கு டி23 புலிக்காக பிரத்யேக அறை உருவாக்கப்பட்டு அதனருகே சிறிய வனப்பகுதியும் அமைக்கப்பட்டு, தசை உயிரணுக்க சிதைவு நோய் மற்றும் முன்னங்காலில் இருந்த வீக்கத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அளிக்கப்பட்ட முறையான சிகிச்சை காரணமாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட T23 புலியின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக தமிழ்நாடு வன உயிரின முதன்மை கூடுதல் வன பாதுகாவலர் சேகர் குமார் நீரச் மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், T23 புலி நாள்தோறும் 8 கிலோ இறைச்சியை சாப்பிடுவதாகவும், எலும்புகளை சாப்பிடுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சிகிச்சை காரணமாக முன் கால் வீக்கம் குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.