
தமிழக பா.ஜ.க கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதன் பின்னணி விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தேசியளவில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க இருந்து வருகிறது. எனினும், தமிழகத்தில் அக்கட்சிக்கு குறைந்தளவிலான வாக்கு வங்கியே உள்ளது. இதை அதிகரிக்கும் பொருட்டு, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தமிழக பா.ஜ.க தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அதையடுத்து அவருக்கு மாநில அரசு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியது. பின்நாளில் அது ’எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. இதுதொடர்பாக அண்ணாமலை தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், நுண்ணறிவு பிரிவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
அந்த அடிப்படையில் அண்ணாமலைக்கு 2 தனி பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மற்றும் மாநில போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




