தமிழக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14-ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர், கொரோனா பரவல் காரணமாக மார்ச் 23க்குப் பிறகு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர் 6 மாத இடைவெளியில் கூட்டப்பட வேண்டும். அதன்படி, வரும் செப்டம்பர் 23-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபை கூட்ட வேண்டி உள்ளது.
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக, எம்.எல்.ஏக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வசதியுடன், வரும் செப்டம்பர் 14ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படும் என சபாநாயகர் தனபால் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேபிட் டெஸ்ட் கருவிகள், இலவச மாஸ்குகள் கொள்முதலில் முறைகேடு மற்றும் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுகிறது போன்ற பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்காட்சிகள் தயாராகி வருகின்றன.
கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
இதனிடையே, தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.