தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு செயதுள்ள அரசு, அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடபட்டுள்ளன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும் நிலையில், நவம்பர் மாதத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில், வரும் 16ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் நவம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ள கருத்துக் கேட்பு கூட்டத்தில் 9-12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாதோர் கடிதம் வாயிலாக கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில், பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.