புதிய கல்வி கொள்கையில் உள்ள பள்ளிக்கல்வி அம்சங்கள் தொடர்பாக ஆராய, 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கல்வித்துறையை மறுசீரமைக்கும் நோக்கில், வகுக்கபட்டுள்ள புதிய தேசிய கல்வி கொள்கைக்கு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.

புதிய தேசிய கல்விக்கொள்கையில் உள்ள மும்மொழி திட்டத்தின் மூலம், இந்தியை திணிக்க முயல்வதாக தமிழகத்தில் திமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதேசமயம், தமிழகத்தில் மும்மொழி திட்டம் அமல்படுத்தப்படாது எனவும், இரு மொழி கொள்கையே நீடிக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில், முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 7 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்தது.
இந்நிலையில் புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள், அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.




