தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்த்தியுள்ளது.

அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி சமயங்களில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டில் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், சிக்கிம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசகளும் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க தடை விதித்துள்ளன.
இந்நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவு படி பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், மக்கள் மாசில்லாத தீபாவளியை கொண்டாடி நாட்டிற்கு உதவ வேண்டும் எனவும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், பட்டாசு விற்பனை சரிய வாய்ப்புள்ளதால், பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.




