சென்னையில் 18-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என்றும், 500 டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் மீண்டும் திறக்கப்படும்மதுபானக் கடைகள்:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் பிரதமரின் உத்தரவுப்படி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 31-ந் தேதி வரை அமலில் உள்ளது. சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டும் மதுபானக் கடைகளை கடந்த மே மாதம் 7-ந் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சென்னையில் மட்டும் மதுபானக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக அரசின் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
நாளை மறுநாள் முதல் திறப்பு டோக்கன் முறையில் மட்டுமே வினியோகம் :

தமிழகத்தில் சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 7.5.2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள், வரும் 18-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது.

மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




