தஞ்சையில் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்றநிலையில், குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசித்து வரும் ராஜா புவனேஸ்வரி தம்பதிக்கு எட்டு நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்று இரண்டு பெண் குழந்தைகளையும் தாய் புவனேஸ்வரி தூங்க வைத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஓட்டை பிரித்து வீட்டினுள் இறங்கிய குரங்கு ஒரு பெண் குழந்தையை தூக்கிச் சென்று சுவற்றின் மீது வைத்துச் சென்றுள்ளது. பின்னர் மற்றொரு குழந்தையும் தூக்கிச் சென்றது.
இதைப்பார்த்த புவனேஸ்வரி சத்தமிட, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது ஒரு குழந்தையை மட்டும் உயிருடன் மீட்க முடிந்தது. மற்றொரு குழந்தையை தேடியபோது அருகில் இருந்த குளத்தில் சடலமாக கிடந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி கூண்டு வைத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வருகின்றனர்.