10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 முதல் 26-ஆம் தேதி வரையும், 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 21 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தமிழக தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டிருக்கிறது. 10-ஆம் வகுப்பு தேர்விற்கு, தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பம் செய்திருந்தவர்கள், தங்களுக்கான தேர்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.இந்த நிலையில் அவர்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை, தமிழக தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டிருக்கிறது.
அதன்படி 10-ஆம் வகுப்பு தனித்தேர்வுகளுக்கான தேர்வு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், அறிவிக்கப்பட்டிருக்கிறது. 10-ஆம் வகுப்பு துணை தேர்வும் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, முந்தைய தேர்வின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களில் குறைவாக இருப்பதாகக் கருதக்கூடிய மாணவர்கள், செப்டம்பர் 21 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறக்கூடிய, 10ம் வகுப்பு துணைத்தேர்வை எழுதி கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்திருக்கிறது.
அதுபோல், 8-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 12-ஆம் வகுப்பு துணை தேர்வானது செப்டம்பர் 21 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 11-ஆம் வகுப்பு துணை தேர்வானது செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7 ம் தேதி வரை நடைபெறும் எனவும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.




