டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுக,கம்யூனிஸ்டு கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை:
மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து டெல்லியில் கடந்த இரண்டு வார காலமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..இதற்கிடையில் 3 வேளாண் மசோதா சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று( 8 ந் தேதி) முழு அடைப்பு போராட்டத்தை டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் ஏற்கனவே அறிவித்தனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினரும், தொழிற் சங்கத்தினரும் இன்று போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யு.சி.மற்றும் தொ.மு.ச. உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னையில் 27 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் போன்ற முக்கிய கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, இன்று காலை சென்னையில் உள்ள 36 போக்குவரத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டத்தின் விளைவாக பொதுமக்களிடம் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க,தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




