மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு 10 ம் வகுப்பு மாணவருக்காக அரசு பள்ளி திறக்கப்பட்டது.
மாஞ்சோலை :
நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கல்வியாண்டு முதல் ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது.
இந்தநிலையில், கடந்த 19 ம் தேதி முதல் முதல் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
Read more – வீட்டில் நின்ற வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் பணம் வசூல் : சிவகங்கையில் நூதனமுறையில் திருட்டு
இதையடுத்து நெல்லையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 313 பள்ளிகள் திறக்கப்பட்டது. அதில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்காக மாஞ்சோலையில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 10 வகுப்பு வரை இயங்கிவரும் இந்த பள்ளியில் மொத்தம் 15 மாணவ-மாணவிகளே படித்து வருகின்றனர். அதிலும், 10-ம் வகுப்பில் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார். தலைமை ஆசிரியராக கோமதி மற்றும் 5 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம் முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டதால் மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு மாணவருக்காக அந்த பள்ளி திறக்கப்பட்டது. ஆசிரியர்கள் இந்த பள்ளிக்கு வர பஸ் வசதிகள் இல்லாததால் தங்களது மோட்டார் சைக்கிள்களில் பள்ளிக்கு வந்து பாடம் நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு மாணவருக்காக ஆசிரியர்கள் பாடம் நடத்த வருவதால் அங்கு வேலை பார்க்கும் தோட்ட தொழிலாளர்கள் நெகிழ்ச்சி அடைத்துள்ளனர்.