தமிழகத்தில் வறிய மாணவர்களின் வாழ்வோடு விளையாடும் ஆன்லைன் கல்வியினை அரசு முறைப்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளினால் ஏற்படும் இன்னல்கள் நாளுக்குள் நாள் அதிகரித்துவருகிறது. குக்கிராமம் மற்றும் மலைக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் சிக்னல் இன்றி அலைந்து திரிந்து வரும் நிலையில் செல்போன் வாங்க முடியாமலே பல மாணவர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளை அரசு முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில், வறிய மாணவர்களின் வாழ்வில் விளையாடும் ஆன்லைன் கல்வியை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதோடு கொரோனாவின் பேராபத்திலிருந்து மக்கள் இன்னும் மீண்டுவரமுடியாத சூழலில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் வழிக்கல்வி கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மாணர்களிள் நலனினை கருத்தில் கொண்டு பரிசோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் வகுப்புகளினால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பட்ட இன்னல்கள் சொல்லி மாறாதது. இவற்றைக் களையாமலேயே தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது, உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி குடும்பத்தில், ஒரு செல்பேசியிலிருந்து ஆன்லைன் வகுப்புகளைத் கவனிப்பற்காக மூன்று சகோதரிகளுக்கிடையே ஏற்பட்ட வருத்தத்தில் நித்யஶ்ரீ என்ற நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியும் , இதேபோல் தனது தந்தையால் செல்போன் வாங்கி தர இயலவில்லை என்பதால் பண்ருட்டி அருகில் சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்த முந்திரி விவசாயின் மகன் விக்னேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் ஆன்லைன்வழி கல்வியின் போதாமையையே வெளிப்படுத்துகிறது என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே பள்ளிகளில் கல்விக்கட்டணம் கட்ட சிரமங்களை அனுபவித்து வந்த பெற்றோர்கள் அதிக விலையுடைய திறன்பேசிகளை வாங்குவதற்கும் அதற்கு இணையச்சேவை பெறுவதற்கும் கடன் வாங்க வேண்டிய சூழலில் தற்போது அகப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு இரண்டு வகுப்புகள் என்று பொத்தாம் பொதுவாக அரசு சொன்னாலும் அதனை முறையாகக் கணகாணிக்காததினால் பல மணி நேரங்கள் மாணவர்கள் கண்ணைக் கெடுக்கும் ஒளித்திரைகளில் சிக்கி மன உளைச்சல் அடைந்து வருகின்றனர்.
நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்ட ஆசிரியர்களும் வருத்தப்பட்டே பாரம் சுமக்கின்றனர். இதோடு ஆன்லைன் வகுப்பின் போது குழந்தைகளின் அருகில் உட்காரும் பெற்றோர்களும் மனவேதனை அடைகின்றனர். ஆனால் இதனையும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. கல்வியாளர்களும் மருத்துவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் சொல்லிக்கூட இந்த அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே தமிழக அரசு, தற்போது நடந்துள்ள மாணவர்களின் தற்கொலைகளைக் கருத்தில் கொண்டு, “விபரீதங்களை விளைக்கும் ஆன்லைன் கல்வி முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். மாணவர்களின் குடும்பச் சூழலைப் பள்ளிகளும், கல்லூரிகளும் புரிந்துகொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்கள் திடமனதுடன் உடல்நலத்துடன் ஆர்வமாகக் கற்கக்கூடிய சூழ்நிலையை தமிழக அரசு விரைந்து உருவாக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் எம்.எச்.ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.