மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை :
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு விடுதலையான சசிகலா கொரோனா சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பினார். அவருக்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சசிகலா வருகை தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இந்தநிலையில், இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும். இந்த வெற்றியை அம்மா அவர்களின் காலில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு தொண்டர்களாகிய நீங்கள் தேனீ போல உழைக்க வேண்டும் என்று கூறினார்.
Read more – இந்திய மருத்துவர்களின் சேவை, உலகம் முழுவதும் தேவை – பிரதமர் மோடி பேச்சு
தொடர்ந்து, இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு மறைந்தார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். அதற்கு நானும் உறுதுணையாக நிற்பேன். விரைவில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.