பா.ஜ.க. சார்பில் நாளை முதல் ஒரு மாதம் வரை நடத்தப்படவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழக பா.ஜ.க.வினர் நவம்பர் 6-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரை, ஒரு மாத காலம் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை உள்ள முருகனின் அறுபடை வீடுகளுக்கு யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனா பரவிவரும் இந்த நேரத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்தால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் எனவும், மேலும் பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மனுவில் குறிப்பிட்டிப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இன்று பதிலளித்துள்ள தமிழக அரசு, தற்போது கொரோனா 2-வது மற்றும் 3-வது கட்டத்தை அடையும் நிலையில் இருப்பதால், வேல் யாத்திரை அனுமதி கிடையாது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. மேலும், இதுபோன்ற எந்தவொரு பேரணிகளுக்கும் அனுமதியில்லை என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இரு பொதுநல மனுக்களையும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அரசின் இந்த முடிவு குறித்து, பா.ஜ.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வேல் யாத்திரைக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். கொரோனா இரண்டாவது அலை பரவும் நிலையில் அனுமதிக்க இயலாது என்னும் அரசின் நிலைப்பாட்டினை வரவேற்கிறோம். நீதிமன்றமும் அதன்படி தீர்ப்பளிக்குமென நம்புகிறோம். முதல்வருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் என அவர் பதிவிட்டுள்ளார்.