டிசம்பர் மாதம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன், நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலவச ரேஷன் பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அதில் அடங்கும்.
மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடும்போது, கொரோனா தொற்று பரவும் ஆபத்து இருப்பதால், அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்காக வீட்டிற்கே வந்து டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று அளிக்கப்ப்படும். இந்த டோக்கனில் பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம், இடம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். நவம்பர் மாதம் வரை இந்த முறையே கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கான டோக்கன், நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த டோக்கன தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் டிசம்பர் 2, 3, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பொருட்களை பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதில் நாளொன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முறை குறிப்பிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும், துவரம் பருப்புக்கு பதிலாக 5 கிலோ கொண்டைக்கடலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.