கடலூர் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் தேசியக்கொடிக்கு பதிலாக வன்னியர் சங்க கொடி கட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கஞ்சங்கொல்லை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 379 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். பள்ளியின் வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் வன்னியர் சங்க கொடியை சிலர் ஏற்றியுள்ளனர். இதனைப் பள்ளி திறந்தும் யாரும் கவனிக்கவில்லை. பின்னர் 10 மணிக்கு மேல் அதனை சில மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து, காட்டுமன்னார்கோவில் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வன்னியர் சங்கக் கொடியை அகற்றி சில மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியின் தேசியக்கொடி மரத்தில் வன்னியர் சங்கக் கொடியை ஏற்றியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.