விஜிபி- கடற்கரையில் கடந்த 30-வருடங்களாக சிலை மனிதராக பணியாற்றி வரும் தாஸ் என்பவர், கொரோனாவால் உயிரிழந்தார் என சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திக்கு விஜிபி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் தாஸ்(60). இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான விஜிபி யுனிவர்செல் கிங்டமில் 30 வருடங்களாக சிலை மனிதராக பணியாற்றி வருகிறார். அதாவது யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டார். இதுதான், இந்த சிலை மனிதரின் பணி. இந்த நிலையில், கொரோனா காரணமாக சிலை மனிதருக்கும் வேலை இல்லாமல் போனது. இதனால், தாஸ் வறுமையில் வாடுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், வாட்சப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வி.ஜி.பி சிலை மனிதர் தாஸ் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார் என்கிற செய்தி திடீரென வேகமாக பரவியது.மேலும், சிலை மனிதர் இறந்து விட்டதாக அவரின் புகைப்படங்களுடன் மீம்களும் வெளியாகின.
ஆன, இதை மறுத்த சிலை மனிதர் தாஸ் குடும்பத்தார், அவருக்கு கொரோனா தொற்றெல்லாம் இல்லை. யாரோ வேண்டுமென்றே வதந்தியை பரப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சூழலில், தாஸ் இறந்து விட்டதாக வெளியான வதந்தி வருத்தம் அளிப்பதாகவும், நல்ல உடல் நலத்துடன் உள்ள தாஸ் கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்து விஜிபி திறந்ததும் மீண்டும் பணிக்கு திரும்புவார் என்றும், விஜிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தான் நலமுடன் இருப்பதை, சிலை மனிதர் தாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.