உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஆபாசமாக விமர்சித்து முன்னாள் நீதிபதி கர்ணன் வெளியிட்ட வீடியோக்களை நீக்க, யூ டியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது வீடியோக்களை முடக்க யூ டியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நீதித்துறையை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின், முக்கியமான அரசியல் சாசன பதவி வகித்த முன்னாள் நீதிபதி கர்ணன், இதுபோல் தொடர்ந்து பேசி வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 12க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்ட நீதிபதி கர்ணன் மீது புகார் அளித்தும், தமிழக அரசும், காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டுக்குள் அத்துமீறியது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, முக்கியமான அரசியல் சாசன பதவி வகித்த முன்னாள் நீதிபதி கர்ணன், தரம் தாழ்ந்து உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற இந்நாள் முன்னாள் நீதிபதிகளையும், குடும்பத்தினரையும், பெண் வழக்கறிஞர்களையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஆபாசமாக விமர்சித்து வருவது, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றம் என குறிப்பிட்ட நீதிபதிகள், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் நீக்க உத்தரவிட்டனர்.
சமூக வலைதளங்களில் யாராவது எதாவது கூறினால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது குறித்து தமிழக அரசு மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர், சைபர் பிரிவு உதவி ஆணையர், முன்னாள் நீதிபதி கர்ணன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.




