தமிழக பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில் கன்னியாகுமரியில் மாட்டு வண்டியில் சென்று தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் என்றாலே ஆடம்பர கார்களின் அணிவகுப்பு என்ற காலம் போய் முன்னோர்களின் வழக்கப்படி மாட்டுவண்டி, குதிரை வண்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தற்போது இளைஞர்களால் மீண்டும் தளிர்விட துவங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அயக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மலவிளை பகுதியில் வின்சென்ட் என்பவரின் மகன் விஜூவுக்கும் ஜெயசாமிலி என்பவருக்கும் மலவிளையை அடுத்த பெனியல் சிஎஸ்ஐ தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு மணமகன் விஜூ மாட்டு வண்டியில் தேவாலயத்திற்கு வந்து மணமகள் ஜெயசாமிலியை திருமணம் செய்து அதே மாட்டுவண்டியில் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தமிழக பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் காளை மாடுகளை அழியாமல் பாதுகாக்கவும் டெல்லியில் சுமார் 80 நாட்களுக்கு மேலாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இதுபோன்று திருமணத்தை நடத்தியதாக மணமகன் விஜூ கூறினார். காருக்கு பதிலாக மாட்டுவண்டியில் சென்ற தம்பதியரை அப்பகுதியினர் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.