கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கொரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது, கண்டனத்திற்குரியது.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முன்களப் பணியாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலில் அறிவித்த முதலமைச்சர், பிறகு இப்படி உயிரிழப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் மத்திய அரசு அறிவித்திருப்பதை மேற்கோள் காட்டி, அனைத்துத் துறை முன்களப் பணியாளர்களுக்கும் 10 லட்சத்திற்குப் பதில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என்று அன்று அறிவித்தார்.
இதுவரை அரசு தரப்பிலோ அல்லது மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலமாகவோ வெளியிடப்படும் அறிக்கையிலோ முன்களப் பணியாளர்கள் எத்தனைப் பேர் பாதிக்கப்பட்டனர் – அவர்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற விவரங்கள் இடம்பெறுவதில்லை. அவர்களின் தியாகத்தைத் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்து வருகிறது அ.தி.மு.க. அரசு.
கொரோனா நோய்ச் சிகிச்சைப் பணியில் தொற்றுக்குள்ளாகி – குணமடைந்து – இதுவரை வீடு திரும்பியவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக முதலமைச்சர் உறுதியளித்த 2 லட்சம் ரூபாய் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது? நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாயும், அரசு வேலையும் எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டது? முன்களப் பணியாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர் முதலமைச்சர். அந்த வாக்குறுதியைத் தவறாமல் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருக்கிறது என்பதை முதலமைச்சர் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.