மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத்தேர்வு ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை:
மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத்தேர்வு ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு தேசத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு என்று அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். போன்ற 11 கல்லூரிகளில், 2021-ல் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தனி நுழைவுத் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டு, தமிழகத்திலிருந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு சித்தூரில் தேர்வு மையங்களை ஒதுக்கி அடாவடியாக குழப்பங்களைச் செய்து கொண்டிருப்பது அநீதியின் உச்சக்கட்டம்.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 2,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்கள் 1,500 ரூபாய் செலுத்தினாலே போதும் என்று இன்னொரு ஒரு பேதமும், துரோகமும் இழைக்கப்பட்டுள்ளது.
இப்போது தங்களின் நிர்வாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் அந்தந்த நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறது என்றால், ஏன் இந்த முரண்பாடு?
அரசியல் சட்டத்தால் இந்தியா முழுமைக்கும் கூறப்பட்டுள்ள சமூகநீதி, மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் மட்டும் எப்படி வேறுபடும்?மத்திய பாஜக அரசு, தனது கட்டுப்பாட்டில் உள்ள 11 கல்லூரிகளில் மட்டும் நீட் வேண்டாம் என்று கூறி, தனி நுழைவுத் தேர்வு நடத்துவது ஏன்?மத்திய அரசின் கீழ் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தனித் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு இப்போது அனுமதி வழங்கி விட்டதால், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று அறிமுகப்படுத்திய நீட் தேர்வினை உடனடியாக ரத்து செய்திட வேண்டும்.
அதே போல், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு இல்லாமலேயே முதுநிலை மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்திடவும், அந்த மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெற்றிடவும் அனுமதித்திட வேண்டும்.இந்த 11 மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை மனதில் கொண்டு, முதல்வர் பழனிசாமி உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி, உரிய அழுத்தம் கொடுத்து, தமிழகத்திலும் நீட் தேர்வு இன்றி முதுநிலை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்கவும், அதில் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டினை செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் 50 சதவீத உள் இடஒதுக்கீட்டைத் தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கை அடிப்படையில் வழங்கிட முதல்வர் உடனடியாக கலந்தாய்வை நடத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




