நடப்பாண்டில் இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் அதிகமாக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில், தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
நாட்டிலேயே மக்களுக்கு அதிகமான இலவச நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவது தமிழகத்தில் தான் என கூறலாம். அதேசமயம், மாநில நிதி வருவாய் சரிவு, மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகை போன்ற காரணங்களால் செலவினங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் தமிழக அரசு கடன் பெற்று வருகிறது.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு, புயல், வெள்ள நிவாரண உதவிகள் என தொடர்ந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்காக நிதி தேவை இருந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக தமிழ்கம் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் சந்தையில் அதிக கடன் வாங்கிய தென்மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை அடைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் வாங்கிய கடனுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டின் கடன் தொகை 107% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் என்ற சாதனையை மகாராஷ்டிரா பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகமும் அதை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன.
கணக்கு தணிக்கை தலைவர் அறிக்கையின்படி, 2020-21 நிதியாண்டில் தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூ.21,833 கோடியாகும். வருவாய் பற்றாக்குறை ரூ.18,266 கோடியாகும். கடன் அளவு கணக்கீடு ஏஜென்சியின் அறிக்கையின்படி தமிழகத்தின் கடன் செலவு செப்டம்பர் மாதத்தில் 6.19 சதவீதமாக இருந்து. இது அக்டோபர் மாதத்தில் 6.16 சதவீதமாக குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் சராசரி வட்டி விகிதம் 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகம் 10 முதல் 35 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால கடன் பத்திரங்களை வினியோகித்து கடன் பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறுகிய கால கடன்களை தமிழகம் வாங்கவில்லை. கடன் பத்திரங்களின் முதிர்வு காலத்தை நீட்டிப்பதே இதன் நோக்கம்.
2020-2021ம் ஆண்டைய தமிழக பட்ஜெட்டில் தமிழகம் ரூ.59,209.30 கோடி கடன் பெற திட்டமிட்டிருந்தது. ஆனால், கடந்த 6 மாதத்திலேயே ரூ.50 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. தமிழக அரசு கமேலும் ரூ.9,627 கோடி கடன் வாங்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.