மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகை ஜெனிபர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சென்னை :
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் “சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஒவ்வொரு தொகுதியிலும் அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகள் தொய்வு குறித்தும், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யும் என்பது குறித்தும் பட்டியலிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது ஓய்வில் இருக்கிறார்.
இந்தநிலையில், நடிகர் விஜய் நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற கில்லி படத்தின் மூலம் இந்த உலகத்திற்கு பிரபலமானவர் ஜெனிபர். இந்த படத்தில் விஜய்க்கு சகோதரியாக நடித்து தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர். தற்போது இவர் விருகம்பாக்கத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.. டார்ச் லைட் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதுகுறித்து ஜெனிபர் தெரிவிக்கையில், நடிகர் கமல் ஹாசனின் தீவிர ரசிகையான நான். அவருக்கு முழுமையாக ஆதரவு அளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே மக்கள் நீதி மயத்திற்கு ஆதரவாக கோவை சரளா, நாசர், ஸ்ரீ பிரியா இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.