அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் அனைத்து சமுதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு பெற்றுத்தரப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
அதேபோல், நடிகர் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.
Read more – அரசியல்வாதிகளுக்கு தேர்வு வைத்தால் எடப்பாடி, ஸ்டாலின் பாஸ் ஆவார்களா ? சீமான் கேள்வி
பாமக சார்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்தநிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் அனைத்து சமூகத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு பெற்றுத்தர பாடுபடும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.